Saturday, December 17, 2011



தூத்துக்குடியின் வரலாறு
முதல் வரலாற்றுக் - குறிப்பு
1. தூத்துக்குடி முதல் வரலாற்றுக் குறிப்பு கி.மு.123ல் தாலாமி என்ற கிரேக்க பயணி எழுதிய நூலில் சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான் தூத்துக்குடி என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்.
2. கிபி.80ல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் தூத்துக்குடி என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துரையை பற்றி சென்னை அரசாங்கத்திற்கு தான் சமர்ப்பித்த அறிக்கையில் தோத்துக்குரையாக மாறி இறுதியில் தூத்துக்குடி என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
4. தூத்துக்குடி என்ற பெயர் ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று டூட்டிகொரின் ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
பிற்கால பாண்டியர்கள் காலம் ஆட்சிவரை
இந்தியாவில் ஒருசில நகரங்களில்தான் தொடர்ச்சியாக கவர்ச்சியான வரலாறு உள்ளது. பண்டைய காலத்தில் வணிக மையங்களாகவும், நாகரீகத்தின் தொட்டில்களாகவும் விளங்கிய துறைமுகங்களெல்லாம் நலிவுற்று வீழ்ச்சியடைந்து விட்டது. அதையும் மீறி வெற்றிநடை போட்டு வளர்ச்சி பாதையில் வளர்ந்துவரும் நகரம் தூத்துக்குடியாகும். அதற்கு காரணமாக அமைந்திருப்பது தூத்துக்குடி துறைமுகமாகும்.

தூத்துக்குடி வரலாற்றில் நமது பாண்டியர்களின் வரலாறு, முகமதியர்களின் படையெடுப்பின் பாதிப்பு, நாயக்கர்களின் ஆட்சி, காலணி ஆதிக்கத்தின் அன்னிய நாடுகளின் ஆக்கிரமிப்பு போட்டிகள், ஆங்கிலேயர் ஆட்சி, சுதந்திரபோராட்டம், நவீன கால அபிவிருத்தி திட்டங்கள் பிரதிபலிப்பை எல்லாம் காணலாம்.

கிபி 7வது நூற்றாண்டு முதல் 9வது நூற்றாண்டு வரை தூத்துக்குடி பாண்டிய மன்னர்கள் ஆட்சியிலிருந்தது. கிபி 10ம் நூற்றாண்டு முதல் 12வது நூற்றாண்டு வரை சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. கிபி 1026ல் இலங்கை மேல் படையெடுத்த சோழ மன்னன் தூத்துக்குடியிலிருந்துதான் படையெடுத்திருக்க வேண்டும் என வரலாற்றுச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இக்கால கட்டத்தில், நீண்ட காலமாக தூத்துக்குடி கடல் வாணிபத்திலும், முத்துக்குளிப்பதிலும் ஒரு மைய நகரமாய் விளங்கியிருக்கிறது. இதற்கு முன்பு கொற்கைதான். ஒரு கடல் துறைமுகமாக அமைந்து அங்குதான் அரேபிய வியாபாரிகள் தங்கள் குதிரை வியாபாரத்தை தங்கள் ஏஜெண்டுகள் மூலம் நடத்தி வந்திருந்தனர். தாமிரபரணி நதியின் முகத்துவாரத்தில் கொற்கை இருந்ததால், மணல்மேடுகள் விளைவாக கொற்கையின் முக்கியத்துவம் குறைந்து அதற்கு பதில் காயல் என்னும் துறைமுகம் தோன்றியது.
கொற்கைக்கு நேர்ந்த கதியே காயலுக்கும் நேர்ந்தது. இதன் விளைவாகவே கிபி1400ல் தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாக மிளிர துவங்கியது. அங்கே சகல பாதுகாப்பும் உள்ள ஒரு இயற்கை துறைமுகம் இருந்ததால் கப்பல்கள் பயமின்றி அங்கு நங்கூரம் போட முடிந்தது எனவே தூத்துக்குடி கடல் வணிகத்திற்கும், துறைமுக வசதிக்கும் சிறப்பு பெற்றது இயல்பே.
பரவர்கள் (Paravas):
தூத்துக்குடியின் ஆதிகுடிகள் என்று அழைக்கப் படுகின்றவர்கள் "பரதவர்கள்". இவர்களது முக்கியத் தொழில் முத்துக் குளித்தலாகும். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்திலிருந்து இவர்கள் முத்துக்குளித்தல் தொழில் செய்ததாகவும், பாண்டிய மன்னரின் குடிகளாகவும் விளங்கியதாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. பிறகு வந்த சோழர்களும் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதால் அவர்களுக்கு வரி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
பிற்கால பாண்டியர்கள் காலத்தில் காயல்பட்டிணத்தில் வியாபாரம் செய்த "மூர்கள்" என்ற அரபியர்கள் பாண்டிய மன்னர்களுக்கு வேண்டிய குதிரைகளை வழங்கியதாகவும், அதற்கு பதிலாக முத்துக்கள் பெற்றுக் கொண்டதாகவும், பிறகு பாண்டிய மன்னர்கள் அரசாங்கத்தில் சில முக்கிய அங்கத்தினர்களாக இடம் பெற்று விளங்கியதாக கூறப்படுகின்றன. இவர்களில் சிலர் காயல்பட்டிணத்தில் திருமண உறவுகளை அங்கு இருந்தவர்களுடன் ஏற்படுத்தி நிரந்தர குடி மக்களாக மாறினர்.
இக்காலகட்டத்தில் வட இந்தியாவிலிருந்து டெல்லி சுல்தான் ஆலாவூதினின் படையெடுப்புகள் தென்னகத்தில் ஏற்பட்டது. ஆலாவுதினின் தளபதி மாலிக்கபூர் பாண்டிய மன்னர்களை தோற்கடித்து மதுரை சுல்தானியத்தை ஏற்படுத்தினான். இஸ்லாமியர்களின் ஆதிக்கம் மதுரையில் ஏற்படுத்தியதன் விளைவாக, காயல்பட்டிணத்தில் தங்கிய மூர்கள், பரவர்கள் நெடுங்காலம் தொட்டு செய்துகொண்டிருந்த முத்துக் குளிதல் தொழிலில் ஈடுபடலாயினர். இதனால் முத்துக்குளித்தலில் போட்டிகள் பிறகு சண்டைகள் ஏற்பட்டு பரவர்களை பல வகையில் துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். இப்படியிருந்த சூழ்நிலையில்தான் போர்ச்சிகீசியர்களின் ஆதிக்கம் கொச்சியில் கிபி1502ல் ஏற்படுத்தப்பட்டன.
மூர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மறைபணியாளர் "மனுவேல் டி எளியாஸ்" என்பவரின் ஆலோசனைப்படி பரவர்களில் முக்கியமானவர்கள் என்று அழைக்கப்படும் "சாதி தலைவர்கள்" கொச்சினுக்கு சென்று அங்கு போர்ச்சிக்கள் கேப்டன் "Dr.பிடாரோ டி அமராலிடம்" தங்களின் குறைகளை முறையிட்டனர். போர்ச்சுக்கள் மன்னன் மூன்றாம் ஜானும் பரவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு கட்டளைப் பிறப்பித்தான். போர்ச்சுக்கல் அரசு உதவி செய்ததால் பரவர்கள் கிறிஸ்துவ மதம் மாற சம்மதித்தனர்.
அதன்படி, கொச்சியிலிருந்து கேப்டன் "ஜோ பிதேலிஸ்" என்பவரின் தலைமையில் போர்ச்சிக்கல் படையொன்று தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டது. படையுடன் கோவாவின் பிஷப் "மைக்கேல் வாஸ்சும்" சேர்ந்து அனுப்பப்பட்டார்.
தூத்துக்குடி வந்துசேர்ந்த போர்ச்சுக்கல் படை மூர்களை முழுவதுமாக தோற்கடித்து துறைமுகத்தை மூர்களிடமிருந்து மீட்டு பரவர்களிடம் கொடுத்தது. எந்த விதமான முகமாற்றமும் இல்லாமல் பரவர்கள் கிருஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.
தூத்துக்குடி கிபி 1532லிருந்து 1658 வரை போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இங்கு ஒரு நிலையான இராணுவம் நிறுத்தப்பட்டு கோட்டைகள் கட்டப்பட்டது. முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது. போர்ச்சுக்கல் மன்னனுக்கு வரி செலுத்தப்பட்டு துறைமுகம் உருவாக ஆரம்பித்தது.
தூத்துக்குடியில் டச்சுக்காரர்கள் (கிபி 1658-1825)
தூத்துக்குடி போர்ச்சுகீசியர்களின் வசம் இருந்தபோது "புனித சவேரியாரின்" அருட் தொண்டால் தூத்துக்குடியின் அருகில் உள்ள பகுதிகளிலும் கிருஸ்துவ மதம் பரவியது. முத்துக்குளித்தலும் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போதுதான் டச்சுக்காரர்கள் தங்கள் வியாபார தலத்தை இலங்கையில் கிபி1602ல் ஏற்படுத்தினர்.
இதுவரை ஐரோப்பாவில் கடல் வணிகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆங்கிலேயரும், டச்சுக்காரரும் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் தலைகாட்டவில்லை. அதற்கும் ஒரு காரணம் உண்டு. அந்த காலத்தில் ஐரோப்பா முழுவதும் ஒரு கிருஸ்தவ மரபை பின்பற்றியதால் உலக கத்தோலிக்க மதகுரு போப்பாண்டவர் ஆறாம் அலெக்சாந்தர் வெளியிட்ட ஓர் ஆணையின்படி உலகில் கடல் கடந்து வியாபாரம் செய்யும் உரிமைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பிரிக்கப்பட்டன.

கீழ்த்திசை நாடுகளில் வியாபார உரிமை போர்ச்சுக்கலுக்கும், மேல்திசை நாடுகளில் அவ்வுரிமை ஸ்பெயினுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் 16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதசீர்திருத்த இயக்கத்தால் கிறிஸ்தவ மதம் பிளவுபட்டது. போப்பாண்டவரின் அதிகாரமும் செல்வாக்கும் முன்போல் செயல்படவில்லை.

இந்த பின்னனியில் போப்பின் அதிகாரத்தை உதறிய ஆங்கிலேயரும், டச்சுகாரரும் வியாபார மையங்கள் அமைக்க கீழ்நாடுகளுக்கு வரத் துவங்கினர். இந்தக் காலக்கட்டத்தில்தான் தூத்துக்குடி ஒருவர் கைமாறி மற்றொருவர் கைக்கு போகக்கூடிய நிலை ஏற்பட்டது.
போர்ச்சுக்கீசியர் தூத்துக்குடியில் நடத்திய அமைதியான, லாபகரமான வியாபாரம், டச்சுக்காரர்களின் பொறாமைக்கு இலக்கானது. கிபி1649ல் பிப்ரவரி மாதம் 4ம் நாள் ஆளுநர் ஜெ.எம்.சுவிட்சரின் இராணுவ தளபதியின் தலைமையில் டச்சு, சிங்கள போர் வீரர்களுடன், பத்து கப்பல் கொண்ட ஓர் பெரிய கப்பல் படையை அனுப்பி தாக்கினார்கள். கடற்கரை வழியாக வந்து தூத்துக்குடியை திருச்செந்தூர் கோயிலையும் கைப்பற்றி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.
மீண்டும் 1658ல் ஒரு வலிமை மிக்க படையெடுப்பு செய்து தூத்துக்குடி துறைமுகத்தை தாக்கி பிடித்துக்கொண்டனர். தூத்துக்குடியை "மதுரை கடற்கரை"யின் தலைமையிடமாக அமைத்துக் கொண்டனர். இந்த மதுரை கடற்கரையில் அடங்கியுள்ள கிராமங்கள், வேம்பார், வைப்பார், புன்னக்காயல், காயல்பட்டினம், பழையகாயல், மணப்பாடு, ஆழ்வார்திருநகரி போன்றவையாகும். முத்துச்சிப்பி துறை தூத்துக்குடியை மேற்பார்வையிட ஓர் அரச படை அதிகாரியை நியமித்தனர்.

பாம்பனிலிருந்து கன்னியாகுமாரி வரையுள்ள வீரர்களையும், வலிமையுள்ள ஓர் தளபதியையும் கொண்ட கப்பற்படை ஒன்றை இங்கு நிலைநிறுத்தி வைத்தனர்.
கிபி 1650 முதல் 1700 வரை தூத்துக்குடியின் நகரம், துறைமுகம், முத்துக்குளித்துரை இவைகளின் வரலாற்றை அறிய ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. 5,000 மக்கள் வசித்த தூத்துக்குடிதான் அன்று கடற்கரையிலுள்ள 7 கிராமங்களில் மிக புகழ்பெற்றதாகயிருந்தது.
தூத்துக்குடி துறைமுகம் 18அடி ஆழமுள்ளதாகச் சொல்ல்பபடுகிறது. அக்டோபர் மாதம் கடலில் அமைதி நிலவும்போது கடலிலிருந்து 78முதல் 90அடி ஆழ தூரத்தில் முத்துக்குளிப்பு தொழில் நடந்தது. 1675ல் தூத்துக்குடி துறைமுகம் கம்பீரமான தோற்றமுடைய துறைமுக நகரம் உருவாகியது.
தூத்துக்குடியில் ஆங்கிலேயர்கள்
கிபி 1782ல் ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனிக்கும், டச்சு கிழக்கு இந்திய கம்பெனிக்கும் போராட்டங்கள் கடுமையானது. ஆங்கில கம்பெனியின் இராணுவ ஆலோசகர் கர்னல் டோனால்ட் கம்பெல்லும், திருநெல்வேலி கலெக்டர் பவுணியும் டச்சு கம்பெனியாரை உடனே அடிபணியும்படி ஆணையிட்டனர்.

ஓரு எதிர்ப்புமின்றி அவர்கள் உடனே சரணடைந்தனர். இதற்குபின் தூத்துக்குடி சிறிதுகாலம் ஆங்கிலேயரின் ஆளுகையிலேயே இருந்தது. கிபி 1810ல் கர்னல் டயசை அனுப்பி தூத்துக்குடியில் டச்சு கோட்டை தளவாடங்களை எல்லாம் தரைமட்டமாக்கினர்.

17ம் நூற்றாண்டில் புராட்டஸ்டண்ட்

கிபி 1542ல் புனித பிரான்சிஸ் சேவியர் என்ற ரோமன் கத்தோலிக்க மிஷனரி கன்னியாகுமரியை மையமாகக் கொண்டு ஊழியம் செய்து வந்ததோடு பல ஊழியர்களையும் அதன் சுற்றுப்புற கடற்கரைப் பகுதிகளுக்கு அனுப்பி ரோமன் கத்தோலிக்க சபையை நிருவினார்.

17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் புராட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த டச்சு நாட்டைச் சேர்ந்தவர்கள் வியாபார நோக்கோடு தூத்துக்குடி வந்தனர். பல எதிர்ப்புக்களுக்கு இடையே மீனவர்கள் மத்தியில் புராட்டஸ்டண்ட் சபைகளை நிருவ முயன்று தோல்வி அடைந்தனர். 1750ல் தாங்கள் ஆராதிப்பதாற்காக தற்போது ஆங்கில ஆலயம் என்று அழைக்கப்படும் பரிசுத்த திரித்துவ ஆலயத்தை கட்டினர். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் நடைபெற்ற ஆராதணையில் பங்குபெற்றவர்களில் கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்கள், மிஷனரி ரிங்கள் தோபே மற்றும் போராயர் கால்டுவெல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

1789ம் ஆண்டு தூத்துக்குடியிலிருந்த டச்சு கவர்னரின் வேண்டுகோளை ஏற்று கனம் ஸ்வார்ட்ஸ் ஐயரவர்கள் தரங்கம்பாடியிலிருந்து ராயப்பன், சத்தியநாதன் என்ற மிஷனெரரிகளை இப்பகுதியில் ஊழியம் செய்ய அனுப்பினார். இவர்களின் ஊழியத்தினால் 272பேர் ஞானஸ்தானம் பெற்று புராட்டஸ்டண்ட் திருச்சபையில் இணைந்தனர். வெகு காலமாக இவர்களுக்கு இவ்வாலயத்திலேய தமிழில் ஆராதணை நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் இந்த சபை 1789ம் ஆண்டு நிறுவப்பட்டது.
19ம் நூற்றாண்டில் தூத்துக்குடி
19ம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் தூத்துக்குடி வனிக உலகில் ஓர் மதிப்பான நிலையை எய்தியது. நகரத்தின் உற்பத்திபொருட்கள் ஒருபக்கம் வளர, அதன் பின்னணி (Hintedland) பிரதேசத்திலுள்ள கணிசமான மக்கள் தொகைக்கு வேண்டிய நுகர்வு பொருட்களையும், தொழில்களுக்கு வேண்டிய மூலப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய தூத்துக்குடியில் ஓர் இயற்கை துறைமுகம், அதன்பின்புறம் வணிக செல்வத்தைப் பெருக்க ஓர் வளமான பிரதேசம் இருப்பதைக் கண்ட ஆங்கில கிழக்கு இந்திய கம்பெனி, தூத்துக்குடி துறைமுகத்தை மேம்பாடு செய்யத் திட்டமிட்டது.

1842ல் டச்சுக்காரர்கள் முயல்தீவில் கப்பலுக்கு வழிகாட்டும் கோபுரத்தை அகற்றி ஓர் கலங்கரை விளக்கை உருவாக்கியது. தூத்துக்குடி துறைமுக வளர்ச்சித் திட்ட வரலாற்றின் ஆரம்பம் என்று கூறலாம். வியாபாரம் துறையில் பல தீவிர மாற்றங்கள் ஏற்பட்டதால், இந்திய துறைமுகங்களில் தூத்துக்குடிக்கு ஓர் தனி சிறப்பு ஏற்பட்டது
தூத்துக்குடி நகர வளர்ச்சி
தூத்துக்குடி புரட்சிகரமாக வளர்ச்சியடைந்ததால், அதை ஓரு முனிசிபல் நகரமாக உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1866ம் வருடம் நவம்பர் 1ம் தேதியில் தூத்துக்குடி முனிசிபாலிட்டி ஸ்தாபிக்கப்பட்டது. 1870ம் ஆண்டு ஒரு சிறு மருத்துவ நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

1883ல் சேசு சபை குருக்கள், புனித சவேரியார் கல்வி நிலையத்தை தொடங்கினார்கள். அதே ஆண்டில் எஸ்.பி.ஜீ.மிஷனை சேர்ந்தவர்கள் கால்டுவெல் பள்ளியை ஸ்தாபித்தனர். கால்டுவெல்லின் தொடர்பாக இறை இயல் கற்றுக்கொடுக்க சாயர்புரத்தில் டாக்டர் ஜி.யு.போப் ஓர் கல்லூரி பிரிவை அமைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நீதிமன்றத்தின் வேலைப் பளுவை குறைக்க தூத்துக்குடியில் 1873ல் ஒரு உபநீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது. 1876-ல் தூத்துக்குடிக்கும் மணியாச்சிக்கும் ரயில் பாதை தொடர்பு, மாவட்ட உள் பகுதிக்கெல்லாம் ரோடுகள் தூத்துக்குடியுடன் இணைக்கப்பட்டன.
தூத்துக்குடி துறைமுகத்தின் திட்டமிட்ட வளர்ச்சி
1842ம் ஆண்டுதான் தூத்துக்குடி துறைமுகம் ஆங்கிலேயரால் முதன்முதலில் ஆய்வு (சர்வே) நடத்தப்பட்டது. அதன் பிறகுதான் திட்டமிட்ட வளர்ச்சி பணி மேற்க்கொள்ளப்பட்டது. 1866ல் முதல் வளர்ச்சி நிகழ்ச்சியாக ஒரு சிறு அலைதாங்கி (Jetty) 1200 ரூபாயில் கட்டப்பட்டது. அது கடலுக்குள்ளே ஒரு 100 அடி நீளமுள்ள மரப்பலகையால் செய்யப்பட்ட ஓர் அமைப்பு.

1873ல் அந்த அலை தாங்கியை மீண்டும் நீளப்படுத்தி பலப்படுத்தினார்கள். 1877ல் பிரிட்டிஸ் இளவரசர் "பக்கிங்ஹாம் பிரபு" தூத்துக்குடிக்கு விஜயம் செய்தபொழுது தூத்துக்குடி ஆங்கில வியாபாரிகள் அவரை சந்தித்து அந்த சிறிய பழைய துறைமுகத்தை நவீனமாக்க விண்ணப்பித்தனர். அவரும் ஆவண செய்வதாக வாக்குறுதியளித்தார். 1881ல் அவர் வாக்குறுதி செயல்படுத்தப்பட்டது.

அலைதாங்கி இன்னும் பலப்படுத்தப்பட்டு, 1887ல் அதன் அகலம் இரண்டு மடங்காக ஆக்கப்பட்டது. அதே வருடத்தில் (1887) தூத்துக்குடி ரயில் நிலையத்தோடு அதை இணைத்து "டிராலி" என்னும் ஓரு் இலேசான ரயில் தண்டவாளங்கள் வழி ஓடும் வசதி செய்யப்பட்டது. 1894ம் ஆண்டு இரும்பு கம்பிகளின்மேல் கட்டப்பட்ட ஒரு புதிய அலைதாங்கி அமைக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது.

கடல் வானிபம் தீவிரமாக வளரவே கடற்கரையின் முன்பாகத்தையெல்லாம் தரையாக மாற்றி, புதிய அலைதாங்கிக்கு போக்குவரத்து மார்க்கங்கள் போடப்பட்டன. இந்த புதிய அமைப்புகளுக்காக 2லட்சம் ரூபாய் செலவு செய்யபட்டன. 1895ம் வருடம் ஜூலை மாதம் 13ம் தேதி மாற்றமடைந்த புதிய அலைதாங்கி துறைமுக பணிகளுக்காக திருக்கப்பட்டன. 1899ல் தென் இந்திய இருப்புபாதை துறைமுக மேடை வரை விரிவாக்கப்பட்டது.
தூத்துக்குடியில் பஞ்சாலைகள்
பருத்தி ஏற்றுமதி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு போகவே, ஆங்கிலப் படையைச் சேர்ந்த ஏ.எப்.ஹார்வி சகோதரர்கள் "கோரல்மில்" என்ற பஞ்சாலையை 1888ல் தூத்துக்குடியில் ஆரம்பித்தனர். இயந்திரத்தால் பருத்தியிலிருந்து கொட்டையை நீக்கும் தொழில்நுட்ப முயற்சி 1894ல் தொடங்கினர்.
இங்கிலாந்திலிருந்து வந்த ஏ அண்டு எம் ஹார்வி கம்பெனியார் பருத்தியை பஞ்சாக்கும், நூலாக்கும் தொழில் செய்து கொண்டிருக்க, ராலி சகோதரர்கள் என்ற மற்றொரு கம்பெனியார், நீராவியை உபயோகித்து பருத்தியை பஞ்சாக்கினார்கள். இவர்களுக்கு தூத்துக்குடி துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் முக்கிய அங்கம் வகித்தது.
தூத்துக்குடியில் சுதந்திர போராட்டம்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில், தூத்துக்குடி இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் ஓர் அரணாகிவிட்டது. வ.உ.சிதம்பரம் பிள்ளை ஓட்டப்பிடாரத்தில் பிறந்து, தூத்துக்குடியில் கல்வி கற்று, திருச்சியில் பிலீடர் பட்டம் பெற்று, தன் வழக்கறிஞர் தொழிலை தூத்துக்குடியில் 1900ம் ஆண்டு குடிபுகுந்தார்.
தேசிய உணர்ச்சியையும், சுய ஆட்சி பற்றையும் மக்கள் மத்தியில் பரப்ப, தூத்துக்குடியில் "விவேகபானு" என்ற தமிழ் பத்திரிக்கையை ஆரம்பித்தார். அப்பத்திரிக்கை மூலம் சமூக சீர்திருத்தங்கள் செய்யவும் அவர் முயன்றார்.
கடற்கரைப் பகுதி இடங்களுக்கு, பயணிகளையும், வணிகப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல ஆங்கிலேயருக்கு இருந்த ஏகபோக உரிமையை முதலில் தாக்கி ஒழிக்க முயன்றார். ஓர் சுதேசிய கம்பல் கம்பெனியை உருவாக்க, நிதி திரட்டுவதற்கு இந்தியர்களிடையே பங்குரிமைகளை விற்றார். நிதி திரட்ட, மிக ஆர்வத்துடன் இந்தியா முழுவதும் அவர் அலைந்து, இறுதியில் இரண்டு நீராவிக் கப்பல்கைள வாங்குவதற்கு மும்பை சென்றார்.
அந்த கப்பல்கள் 1907ம் ஆண்டு ஜூன் முதல் தேதி தூத்துக்குடி வந்து சேர்ந்தன. "எஸ்.எஸ்.கேலியா" பெயர்கொண்ட முதல் கப்பல் மேல்தளத்தில் வ.உ. சிதம்பரம்பிள்ளை அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் வந்த இரண்டாவது கப்பலின் பெயர் "எஸ்.என்.லாவோ". ஒரு தேசிய வீரனுக்கு அளிக்கவேண்டிய கெளரவத்துடன் வ.உ.சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியில் வரவேற்கப்பட்டார்.
இவ்வாராக இந்தியாவிலேயே முதல் "சுதேச நீராவிக் கப்பல் கம்பெனி" தோன்றி, ஆங்கில காலணி ஆதிக்க வேறுபாடுகளை அறுக்கும் இந்திய மக்களின் கூட்டு முயற்சியின் சின்னமாக காட்சியளித்தது. இலவச கம்பல் பயணம், சுதேச கம்பெனி அமைப்பார்களை மிரட்டல், ரயில்வே நிலையத்தில் தங்கள் கப்பலுக்கு பயணிகளை சேர்க்க தரகர்களை நியமித்தல் போன்ற பல நேர்மையற்ற முறைகளை பிரிட்டிஸ் கம்பெனியார் கையாண்டனர்.
சோதனையும் வேதனையும் நிறைந்த இந்த நேரத்தில் சிதம்பரனாருக்கு இரு கரங்கள் போல் இரு நண்பர்களின் அரிய ஒத்துழைப்பு கிடைத்தது. ஒருவர் தீப்பொறிக்கும் தேசியவாதி சுப்பிரமணியசிவா மற்றொருவர் பிரசங்க சிங்கமென்றழைக்கப்பட்ட பத்மநாத அய்யங்கார்.
சுதேசியத்தையும், அன்னியநாட்டு பொருட்களை தவிர்க்கவும் போராட்டத்தை தீவிரப்படுத்தவும், உள்நாட்டு தொழில்களை உற்சாகப்படுத்தவும், 1908ல் "தூத்துக்குடி மக்கள் சங்கம்" என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. வ.உ.சி. பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் அடிமை தனத்தை தூக்கி எறிய இந்திய மக்கள் ஒன்று திரண்டு அணிவகுத்து நிற்கவேண்டுமென பேசினார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் சிதம்பரம்பிள்ளை செயலை தேச துரோகமாக கருதி அவரை கைது செய்து. திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அவருக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாட்டை விட்டு வெளியேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யவே, அவர் தண்டனை 6ஆண்டுகால கடுங்காவலாக குறைக்கப்பட்டது. மக்களுடைய திறமைவாய்ந்த தலைவர் சிறையில் அடைக்கப்பட்டதால், பழி வாங்கும் உணர்ச்சி வசப்பட்ட மக்கள் சமுதாயத்தில் அமைதியற்ற ஓர் நிலை தோன்றியது.

அரசாங்கத்தை எதிர்க்க, பல ரகசிய சதிக்குழுக்கள் செயல்பட ஆரம்பித்தன. இந்த சூழ்நிலையின் உச்சக்கட்டமாக 1911ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி வாஞ்சு ஐயர் என்னும் ஓர் தீவிர புரட்சிக்காரர் ஓர் ரகசியக் குழுவில் உறுப்பினர் கலெக்டர் ஆஷை அவர் கொக்கிகுளத்திற்கு பயணம் செய்யும் பாதையில் மணியாச்சி இரயில் சந்திப்பில் சுட்டுக் கொலை செய்தார்.

இது சம்பந்தமான வழக்கு விசாரணையில் ரகசிய அரசியல் குழுக்கள் சதிதிட்டங்கள் வெளிப்பட்டன. ஒரு இரும்புக் கரங்கொண்டு அரசாங்கம் இந்த தீவிரவாதிகளின் கூட்டங்களையும், செயல்களையும் அடக்கினர். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின், மஹாத்மா காந்தியின் தலைமையில் உருவான சுதந்திர போராட்டத்தால் தூத்துக்குடி ஓர் சிறப்பான பங்கினை வகித்தது. சிதம்பரம்பிள்ளை சிறையில் அடைக்கப்பட்டவுடன் சுதேசிய கப்பல் கம்பெனிக்கு பல இன்னல்கள் ஏற்பட்டு இறுதியில் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
புதிய துறைமுகம் வளர்ச்சி
1920ம் ஆண்டு முதல் ஒரு முதிர்ச்சியடைந்த துறைமுகம் தேவை என்று உணர ஆரம்பித்தனர். 1930ல் சென்னை அரசாங்கம் சன் வால்டே பாரிலிஸ்டரின் பங்காளிகளையும் (Partner) தூத்துக்குடியில் ஓர் ஆழமான கடல் துறைமுகத்தை அமைப்பதற்கு சாத்தியக் கூறுகளையும், பரிசீலனை செய்ய நியமித்தது.
பெரிய துறைமுகம் அமைப்பதற்கு சாதகமாக உள்ளது என்று சர்.வாட்வேஹரி ஒரு திட்டம் சமர்ப்பித்தார். இதற்கு முற்றிலும் மாறாக சன்.ராபர்ட் பிரிஸ்டவ் ஒரு திட்டத்தை படைத்தார். அத்திட்டத்தின் பெயர் சர் பிரிஸ்டவ் திட்டம். அவர் திட்டத்தின்படி ஆழ்கடல் துறைமுகம் முயல்தீவில் கட்டப்பட வேண்டும் அதன் மதிப்பீடு 60லட்சம் ரூபாய் ஆகும். இதை பரிசீலனை செய்ய அரசாங்கம் "பால்மர் குழு" என்றழைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்து அந்தக் குழு பிரிஸ்டவ் திட்டத்திற்கு சில புதிய அம்சங்களை சேர்த்தது. அதாவது முயல்தீவில் ஒரு கால்வாய் தோண்டப்பட்டு கடற்கரையின் முன் பகுதியிலேயே துறைமுகம் கட்டப்படவேண்டும். இந்த அமைப்பிற்கு 200ஏக்கர் தரைப்பகுதி ஆக்கிரமிப்பு செய்ய யோசனை கூறப்பட்டது.
இரு திட்டங்களுக்கும் செலவு தொகையை மதிப்பிட பிரிஸ்டவ் குழு மீண்டும் கோரப்பட்டது. பிரிஸ்டவ் திட்டத்திற்கு 120 லட்சம் ரூபாயும், பால்மர் திட்டத்திற்கு 160 லட்சம் ரூபாயும் மதிப்பிடப்பட்டது. இவ்வளவு அதிகமான செலவுக்கு அரசாங்கம் தயாராக இல்லாததால் திட்டடங்கள் அமுல் நடத்துவது 1930ல் தள்ளிப்போடப்பட்டது.
இதற்கிடையில் தொழிலும், வியாபாரமும் வளர்ச்சியடைந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில் புதிய ரோடுகளும், இருப்புப் பாதைகளும், போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கவே, தூத்துக்குடி பின்னணியாக விளங்கிய முக்கிய இடங்களுடன் அவையெல்லாம் இணைக்கப்பட்டன. உற்பத்தி பொருட்களும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, தூத்துக்குடி துறைமுகத்தில் குவிந்துகொண்டிருந்தன.
1930ல் மாகானம் முழுவதும் அகல பாதைகள் போட திட்டம் வகுக்க, அரசாங்கம் திரு.விப்பனை நியமித்தது. திருநெல்வேலி மாவட்டத்தின் நிலையைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, மிகவும் முக்கியம் வாய்ந்த தூத்துக்குடி துறைமுகம் நெடுஞ்சாலை ரோடுகளுக்கு தூரம் என்று கூறி, தூத்துக்குடியுடன் அவைகளை இணைக்கும் ஓர் போக்குவரத்து திட்டத்தை வரைந்து கொடுத்தார். அவர் கருத்தின்படி, வணிகப் பொருட்கள் தூத்துக்குடிக்கு எளிதில் வந்து சேருவதற்கு வசதியாக பல பெரிய ரோடுகள் போடப்பட்டன. ஆனால் துறைமுகத்தை விரிவாக்க திட்டம்,1939-லும் 1940-லும் மேலும் யோசிக்கப்பட்டு, நிதிக்குறைவால் கைவிடப்பட்டது.
இக்கால கட்டத்தில்தான் நம்நாடு சுதந்திரம் அடைந்தது. அதன்பிறகு 1949-ல் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பெயரில் ஒரு சுதேசி நீராவி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடலில் செலுத்தப்பட்டது. சிதம்பரம்பிள்ளை அவர்களின் ஞாபகச் சின்னமாக இந்த கப்பலை அன்று இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த சி.ராஜகோபாலச்சாரியார், கடலில் மிதக்கவிட்டார்.

ஒரு புதிய திட்டத்தை வகுத்து கொடுத்தார். இதற்கிடையில் சேதுசமுத்திரம் கால்வாய் திட்டத்தையும் அதனால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஏற்படும் விளைவுகளை யெல்லாம் கணிக்க சர்.ஏ.ராமசாமி முதலியார் தலைமையின்கீழ் ஒரு புதுக்குழு, தூத்துக்குடி துறைமுகத்தை உடனடியாக விரிவாக்குவதன் அத்தியாவசியத்தை கோடிட்டுக்காட்டி, அதனால் சேது சமுத்திர திட்டமும், தென் மாநிலமும் பயனடையும் வாய்ப்புகளையெல்லாம் தங்கள் அறிக்கையில் பரிந்துரைத்தனர்.
தூத்துக்குடி துறைமுக நிறைவு திட்டத்தில் மக்களின் ஒன்று திரண்ட ஆர்வத்தை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டிய ஆண்டு 1956 என்று உறுதியாகக் கூறலாம். மக்களின் நீண்ட நாள் ஆவலின் ஒளிமயமான அடையாளமாக அந்த வருடத்தில்தான், தூத்துக்குடியின் இன்றைய புதிய துறைமுகத்தின் மூலைக் கல்லை நாட்டிய, தூத்துக்குடி துறைமுக அபிவிருத்தி சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்குபின்னர்தான் மக்களின் ஆக்கபூர்வ முயற்சியெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட்டு, துறைமுக வளர்ச்சி பணித்திட்டம் வேகமடைந்தது.

இந்த சங்கத்தின் ஆதரவில் வியாபார கழக உறுப்பினர்கள், பழைய துறைமுக அறக்கட்டளை அங்கத்தினர்கள் அடங்கிய ஓர் தூதுக்குழு மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது. இவர்கள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, திட்டக்குழு தலைவர், இதர சம்பந்தப்பட்ட மாநில, மத்திய அமைச்சர்களையெல்லாம் சந்தித்து இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டு திட்டகால அளவில் தூத்துக்குடி துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியத்தை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்தது. பிரதமர் வாக்குறுதியின்படி திரு.பி.மதிராணியும், திரு. ஜெ.டி.சாக்கோவும் ஆராய்ச்சி செய்து, தமது அறிக்கையில் துறைமுக வளர்ச்சியை பரிந்துரைத்தனர்.

இறுதியில் மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் 1963ல் ஆழ்கடல் துறை வளர்ச்சி பணிகள் துவங்கியது. இது 1944ல் 73கோடி ரூபாயில் முடிவுற்றது. இன்றைய புதிய ஆழ்கடல் துறைமுகம் 1974ல் ஜூலை 11ம் தேதிதான் சேவையை துவக்கியது. இது இந்தியாவில் பத்தாவது பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.1979ல் பழைய துறைமுகமும் புதிய ஆழ்கடல் துறைமுகமும் ஒன்றிணைக்கப்பட்டது.

பழைய துறைமுகம் "பி" பகுதி எனவும், புதிய துறைமுகம் "ஏ" பகுதி எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு துறைமுகமாக இருந்த தூத்துக்குடி துறைமுகம் இன்று நவீனமயமாக்கப்பட்டு இந்தியாவின் 10வது பெரிய துறைமுகமாக விளங்குகிறது.
தூத்துக்குடியின் புவிஅமைப்பு (1 of 1)
தூத்துக்குடி தென்னிந்தியாவில் சுமார் 540கிமீ தூரத்தில் சென்னைக்கு தென்மேற்காக மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடாவிற்கு இந்த மாவட்டம் தெற்கில் தென்மேற்கு திசையில் திருநெல்வேலி மாவட்டம், மேற்கில் வடமேற்கு திசையில் விருதுநகர் மாவட்டம் மற்றும் வடக்கே ராமநாதபுரம் மாவட்டமும் அமந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4621ச.கி.மீ. ஆகும் தூத்துக்குடி நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் மற்றும் தாலுகா தலைநகரமாகவும் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஒரு தனி மாவட்டமாக 1986ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து அறிவிக்கப்பட்டது.

நீர்பாசனம்
தூத்துக்குடியில் பெரிய அளவில் எந்தவொரு நீர்த்தேக்கமும் இல்லை. ஆனால் பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு நீர்த் தேக்கங்கள் மிக அருகில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி ஆறு முக்கிய பாசன வசதியை கொடுக்கிறது. தாமிரபரணி ஆறு தவிர வைப்பாறு விளாத்திகுளம் தாலுகாவிலும், கருமேனி ஆறு சாத்தான்குளம் மற்றும் திருச்செந்தூர் தாலுகாவிலும் பாசன வசதியை அளிக்கிறது. மேலும் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் எப்போதும்வென்றான் கிராமத்தில் ஒரு சிறிய நீர்த்தேதக்கம் உள்ளது.

No comments:

Post a Comment