Saturday, December 17, 2011

sivan

ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்ஸ்ரீ தேனுகாம்பாள் சமேத ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோவில் - மாடம்பாக்கம்

சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்து அன்று பொன் ஒளி மின்னும்
தவநச் ஜடைமுடித் தாமரையானே.

---- திருமூலர்.

ஆத்மீக சக்தியின் உறைவிடமாகத் திகழ்வது பாரத தேசம். தருமம் தழைக்கும் இப்பாரத நாட்டின் தென்னாட்டில் என்நாட்டவர்க்கும் இறைவனாக சென்னை அருகில், மாடம்பாக்கம் எனும் கிராமத்தில் அம்மையோடு அப்பனாக அருள்புரிகிறார் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர். தேனு என்றால் தெய்வீகப் பசு என்று பொருள். கபிலர் தெய்வீகப் பசுவாக மாறி வழிபட்ட தலமாகையால் இவர் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அவதாரமான கபில மகரிஷி, பலகாலம் பூமியில் தன் தெய்வீகக் கடமைகளை ஆற்றிவிட்டுப் பின் தன் பிறவியின் தொடர்பை நீக்கி, முக்திநிலை காணும் பொருட்டு தவம் இருந்து சிவ வழிபாடு செய்து வந்தார். அப்போது வழக்கத்திற்கு மாறாகத் தன் இடது கையில் லிங்கத்தை வைத்துக் கொண்டு வலது கரத்தால் சிவபூஜை செய்தார். இதனால் ஏற்பட்ட தோஷத்தால் முக்திபேறு கிடைக்கவில்லை. பின் பசுவாக உருவெடுத்து ஒரு கிராமத்தில் பசுக்கூட்டங்களுடன் சேர்ந்து மேய்ந்து வந்தார். தெய்வீகப் பசுவாகிய கபிலர் அவ்விடம் உள்ள சுயம்பு லிங்க மூர்த்தியின் மேல் பால் சொறிந்து, தினமும் காமதகன மூர்த்தியான ஈசனை வழிபட்டு வந்தார். ஒருநாள் இதைக் கண்ட இடையன் பசுவின் மடியில் தன் கையில் வைத்திருந்த தடியால் அடிக்க காம்பில் இருந்து இரத்தம் வடிந்தது. வலி தாங்க முடியாத பசு தன் காலை எட்டி உதைக்க அது லிங்கத்தின் மேல் பட, லிங்க மூர்த்தியின் மேல்ப்பகுதி சிதிலமாக, இரத்தம் பெருகி அறாக ஓடிக் குளத்தின் நீரோடு கலந்துபோனது. இடையன் இதை ஊர் மக்களிடம் சொல்லி அவர்களை அவ்விடம் அழைத்து வந்தான். மக்கள் கலங்கி நிற்கும்போது, ஆகாயத்தில் தோன்றிய உமாபதியாகிய சிவபெருமான் " மக்களே பயம் வேண்டாம், கபிலரின் தோஷம் நீங்கவே யாம் இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோண்றினோம் " என்று கூற, கபிலரும் இறைவனிடம், தன்னை மன்னித்தருளுமாறு வேண்டினார். அருள் வடிவான மகேசுவரரும் கபிலருக்கு அருள் செய்ய அவர் ஜோதிவடிவமாக இறைவனுடன் கலந்தார்.

இறைவனின் அருளால் இத்துனை நிகழ்ச்சிகளும் சோழ மன்னனின் கனவிலும் தோன்ற, சோழர்கோனும் அவ்விடம் வந்து நடந்தவை அறிந்து இறைவனுக்கு அங்கு ஒரு ஆலயம் அமைத்தான். இக்கோவில் பின்னர் பாண்டிய மன்னர்களாலும், பல்லவ மன்னர்களாலும் திருபணி செய்விக்கப்பட்டது. இகோவில் மிகவும் நேர்த்தியான சிற்பக்கலையுடம் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் இத்தலத்தில் உள்ள முருகனை வழிபட்டு திருப்புகழ் பாடியுள்ளார். பல சித்தர்கள் வாழ்ந்து பூஜித்த தலம் இது.

இங்குள்ள தூண்களின் நாற்புறமும் சிற்பக்கலை நயத்துடன் பல தெய்வ உருவங்கள் செய்யப்பட்டுள்ளன. மிக அருமையாகச் செதுக்கப்பட்ட வீரபத்திரர், நரசிம்மர், வாமணர், அர்த்தநாரீஸ்வரர், கஜசம்ஹார மூர்த்தி, ஹயக்ரீவர், சோமஸ்கந்தர், சங்கரநாராயணர், சரபேஸ்வரர் மேலும் பல உருவங்களும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.

இங்கு நான் சிறப்பாகப் பார்த்த விடயங்கள் மூன்று. முதலில் இங்கு அம்ப்பாள் சன்னதி அருகே உள்ள கபிலரின் சுவர் சிற்பம். கபிலர் இதில் இடது கையில் லிங்கத்தோடு காட்சி தருகிறார், மிக அருமையான, தத்ரூபமான சிற்பம். அடுத்தது மூலவர் சன்னதி அருகே உள்ள பிரம்மா - விஷ்ணு சிவனின் அடி முடி தேடும் தூண் சிற்பம். இச் சிற்பத்தின் அழகை என்னவென்று சொல்ல....வார்த்தைகள் இல்லை வர்ணிக்க....பிரம்மா அன்னப் பறவையாகவும், விஷ்ணு வராகராகவும் இறைவனின் அடி முடி தேடுவதை அவ்வளவு அருமையாகச் செதுக்கியிருக்கிறார்கள். மூன்றாவதாக, மண்டபத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சனேயர் சிற்பம். ஐந்து முகமும் நேர் கோட்டில் இருக்க..காற்றின் மைந்தன் காற்றோடு காற்றாக என் மனதில் கலந்த இன்பத்தை எவ்வாறு வார்த்தைகளில் சொல்வது !!!! படங்கள் எடுக்க அனுமதிக்காது ஒரு மிகப் பெரிய குறை, இல்லையேல் உங்களுக்கும் ஈசன் புதல்வன், அஞ்சனை மைந்தன் அனுமனின் திருவுருவம் காணும்படி செய்திருப்பேன்.......

இத்திருக்கோவில் மிக அருமையாக பராமரிக்கப்படுகிறது. ஆலயத்தின் அருகில் உள்ள கபிலதீர்த்தமும் மிக அருமையாக உள்ளது. மிக அமைதியான சூழலில் என் அப்பன் உலகநாதன் என்னைத் தாலாட்டுவது போலவே இருந்தது. மனதிற்கு இதமான தெய்வீகச் சூழல் இங்கு நிலவுகிறது.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விடயம், இங்கு நான் கண்ட பல சரபேஸ்வரர் சிற்பங்கள். ஏனைய ஆலங்கள் போல் இல்லாமல் இங்கு பல இடங்களில் சரபேஸ்வரர் சிற்பங்கள் காணக்கிடைக்கின்றது. ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் சரபர் சிற்பங்கள் பார்த்தாக ஞாபகம். இங்கு சரபர் ராகு காலப் பூசை மிகவும் சிறப்பானது.

இக்கோவிலின் அருகில் இன்னொரு முக்கியமான விடயம் உள்ளது, அது பதிணென் சித்தர் சக்திபீட பிருந்தாவனம். இது தெய்வ அருள் பெற்ற சித்தர்களுக்கான கோவில். மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சித்தருக்கும் தனித்தனிச் சன்னதி. இங்கு நித்திய அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு சக்திபீடம், ஐய்யப்பன் சன்னதி, கோதண்டராமர் சன்னதிகளும் உண்டு. மிக நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறத்து. இது திரு சேஷாத்ரி சுவாமிகள் டிரஸ்ட் ( www.seshadri.info ) மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு சன்னதியாக நான் வழிபட்டுவரும் போது போகர் சன்னதி முன் சென்றதும் ஒரு நிமிடம் என் மூச்சே நின்றுவிட்டது போல் ஆகிற்று, உணமையாகவே போகர் அங்கு அமர்ந்திருப்பது போன்ற ஒரு சிறபம், என்ன ஒரு நேர்த்தி...போகரை நேரே பார்த்தது போல ஒரு பிரமிப்பு. துலாபாரமும் இங்கு உண்டு. தேனுபுரீஸ்வரர் ஆலயத்தின் முன்னே ஒரு சிறிய ஷீரடி சாய்நாதரின் ஆலயமும் உண்டு. இங்கிருந்தி ஒட்டியம்பாக்கம் எனும் ஒரு கிராமம் உள்ளது, அங்கு ஒட்டீஸ்வர் ஆலயம் உள்ளது ( லிங்கம் இங்கு சற்று உயரமாக இருக்குமாம் ) நேரமின்மை காரணத்தால் இக்கோவிலுக்குச் செல்ல இயலவில்லை. நிச்சயம் ஒருநாள் என்னை அங்கு அழைப்பார், உமாமகேசர்.

இதற்கு அடுத்து நான் சென்றது " சித்தாலப்பாக்கம் " எனும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவில். இது மாடம்பாக்கத்தில் இருந்து 5 கி.மி. தூரத்தில் உள்ளது. இது சிறிய கோவிலாக இருந்தாலும், மிக அழகாக இருந்தது. அமைதியான சூழல் மனதிற்கு இதமாக இருந்தது. சித்தலப்பாக்கம் என்பது முற்காலத்தில் சித்தர்கள் மிக அதிக அளவில் இருந்த இடம். சித்தர்கள் பாக்கம் என்பதே மருவி " சித்தாலப்பாக்கம் " என்று ஆகிவிட்டது. இக்கோவில் தனி நபரால் கட்டப்பட்டது. விரைவில், ஸ்ரீ இராமச்சந்திர மூர்தியின் அருளாலும் குரு ஸ்ரீ ராகவேந்திரர் அருளாலும், இக்கோவில் விரிவடைந்து மேலும் சிறப்படையும் என நம்புகிறேன்.

அம்மைஅப்ப ரேஉலகுக் ( கு ) அம்மை அப்பர் என்று அறிக
அம்மை அப்பர் அப்பரிசே வந்துஅளிப்பர் - அம்மை அப்பர்
எல்லா உலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்
அல்லார்போல் நிற்பர் அவர்.

- திருக்களிற்றுப்படியார்.

சக்தியும் சிவமும் என இரு தன்மையை உடைய சிவபெருமானே, உலகிற்குத் தாயும் தந்தையும் ஆவார். அவ்வாறு தாயும் தந்தையுமாக விளங்கும் அம்மையப்பர் உலகில் உயிர்களின் பக்குவத்திற்கேற்ப அருள்புரிவர். அத்தகைய தாயுமானவரான ஈசன் உலகின் எல்லாப பொருள்களிலும் கலந்து நிற்பர் ஆயினும் அவற்றின்பால் கட்டுண்ணப்படார். அவ்வாறாகிய தாண்டவக்கோனின் திருப்பாதங்களைப் பணிந்து என்றும் நலம் பெருவோமாக.

1 comment:

 1. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  எனது ப்ளாக்கில்:
  பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
  புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
  A2ZTV ASIA விடம் இருந்து.

  ReplyDelete